கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது.
அதேவேளை அதன் உண்மைத் தன்மை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை எனினும் சில அரசியல் தரப்புக்களால் குறித்த விடயம் திசை திருப்பப்பட்டு வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் இந்த விடயத்தில் இரண்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முதலாவது குறித்த மாணவியால் ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு, இரண்டாவது தனியார் கல்வி நிலைய ஆசிரியரால் அவமானப்படுத்தப்பட்டதாக கூறும் சம்பவம். ஆக இரண்டும் ஒரே சம்பவம் அல்ல இங்கு இரண்டு சம்பவங்கள் இரண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

முதலாவது சம்பவமானது ஆசிரியரால் மாணவி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம், குறித்த சம்பவமானது கடந்த 2024ம் ஆண்டு இடம் பெற்றதாகவும் அது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த வழக்கில் பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டு ஆசிரியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கில் மாணவி பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பின் குறித்த ஆசிரியருக்கு பிணை வழங்கப்பட்டிருக்க மாட்டாது.
குறித்த சம்பவத்தின் பின்னர் குறித்த மாணவி வேறு பாடசாலைக்கு விலகிச் சென்று கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இரண்டாவது சம்பவம், மாணவியின் மரணத்திற்கு ஒரு சில தினங்களிற்கு முன்னர் தனியார் கல்வி நிலையத்தில் கற்றலில் ஈடுபட்டிருந்த போது குறித்த கல்வி நிலைய ஆசிரியர் ஒருவரால் அவமானப் படுத்தப்பட்டதாகவும், அதனால் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது. இதில் அவமானம் ஒன்று நிகழ்ந்திருப்பின் குற்றவாளி குறித்த கல்வி நிலைய ஆசிரியரே.
இந் நிலையில் குறித்த சம்பவம் காரணமாக ஒரு மாணவியின் உயிர் வீணே இழக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்வு குறித்த மரணத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அதேவேளை இதுவரை குறித்த மாணவியின் பெற்றோரால் முறைப்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. என்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடக சந்திப்புக்கள், போராட்டங்களை மட்டும் நடாத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதாவது மகளீர் விவகார அமைச்சர் நேரடியாக வருமாறு அழைப்பு விடுத்த போதும், சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கூறிய போதும் அவைகள் எதனையும் மேற்கொள்ளாது கண்டனப் போராட்டங்களை மேற்கொள்வதாலோ, சமூக வலைத்தளங்களில் எழுதுவதாலோ தீர்வையோ, நீதியையோ பெற்றுக் கொள்ள முடியாது.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், முஜிபுர் ரஃமான் உட்பட பலர் குரல் கொடுத்து வருகின்றனர். உண்மையில் வரவேற்கத்தக்கது. எனினும் அதற்கு பின்னாலும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான விசமத்தனமான அரசியலை காண முடிகின்றது.
இங்கு இரண்டு சம்பவம், இரு குற்றச் சந்தேக நபர்கள், இவர்களுக்கு அப்பால் பெற்றோர், சக மாணவிகள் என்போரும் குற்றச் சந்தேக வலயத்திற்குள் உள்ளனர். இந்த நிலையில் ஒருதலைப் பட்சமாக ஆசிரியரை மட்டும் குற்றவாளிகளாக்க பல்வேறு தரப்பினரும் முயல்வதன் நோக்கம் என்ன?
குறித்த மாணவி தற்கொலை செய்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள், வீட்டில் நடந்த சம்பவம், மாணவியின் உடற்கூற்று அறிக்கை, உள்ளிட்டவைகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ஒருதலைப் பட்சமாக ஒருவரை நோக்கி கை நீட்டுவது என்பது தவறான முன்னுதாரணம்.
அதேபோல் விசாரணைகளே முடிவுறாத நிலையில் வடகிழக்கில் மட்டும் இயங்கும் தமிழர் ஆசிரியர் சங்கம் குறித்த ஆசிரியருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்பது அவர்களின் கல்வி பின் புலத்தையே ஐயப்படுத்துவதாக அமைந்துள்ளது. விசாரணைகள் நடைபெற்று, குற்றம் உறுதிப் படுத்தப்பட்டால் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமே தவிர விசாரணையே நடைபெறாது தண்டனை வழங்கும் நடைமுறை இலங்கைச் சட்டத்தில் உள்ளதா???
அடுத்து குறித்த மாணவி விழும் வீடியோவை அவதானிக்கும் போது உடல் அசைவு இன்றியே விழுவது போன்று உள்ளதுடன், அவர்களின் பெற்றோரின் முகத்தில் அவ்வளவு கவலையை காண முடியவில்லை என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே சட்டம் தனது கடமையை செய்யும், நீதித்துறை சுயாதீனமானது அதுவும் தனது கடமையை சரிவரச் செய்யும், சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி பாதிக்கக் கூடாது இதில் குற்றவாளி யார் என்பதை பொலிசாரும், நீதிமன்றமும் விரைவில் வெளிப்படுத்தும் அதுவரை உங்கள் வட்டார, குறுகிய அரசியலை ஓரங்கட்டி வைத்து விட்டு நீதிக்கு மதிப்பளித்து செயற்படுங்கள்.